Tuesday, November 10, 2026
தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பாடசாலையின் குடிநீர் தொட்டியில் விஷமிகள் மனிதக்கழிவை கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலையில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி கற்று வருகின்றனர். காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து கடந்த 5ஆம் திகதி பாடசாலை மீண்டும் திறக்கப்பட்டது.
அன்றைய தினம் மாணவர்களுக்கான உணவு தயாரிப்பதற்காக வந்த பெண் ஒருவர், பாடசாலையில் பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் குழாய் உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். இதுகுறித்து அவர் பாடசாலை நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து குடிநீர் தொட்டியைத் திறந்து பரிசோதித்தபோது, அதற்குள் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், தொட்டியில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறையில் இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விஷமிகள் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான தகவல் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பாடசாலையில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, இத்தகைய விஷமச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.