2027 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை எதிர்வரும் 12 ஆம் திகதி

user 09-Nov-2026 இலங்கை 5 Views

  2027 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ளார்.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பாதீட்டு உரையைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதி மாலை இடம்பெறும். பாதீட்டின் குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும். பாதீட்டு விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

 வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் அறிக்கை

அதேவேளை  வெரிட்டே ரிசர்ச் நிறுவனம்  , 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்ட 36 முன்மொழிவுகளில் 14, குறிப்பிடத்தக்க அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என  அதன்  அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.

இது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட முன்மொழிவுகளில் சுமார் 40 சதவீதமாகும். அதேவேளை, முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட்ட முன்மொழிவுகளின் விகிதம் 2024 ஆம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு பாதீட்டு அமுலாக்கத்தைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவான அதிகபட்ச வீதம் இதுவாகும்.

மொத்தமாக 15 முன்மொழிவுகள், அதாவது 41 சதவீதமானவை, முழுமையாகவோ குறிப்பிடத்தக்க அளவிலோ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், அதனை நடைமுறைப்படுத்த வழக்கத்தைவிடக் குறைவான காலமே கிடைத்த போதிலும் இந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், 19 சதவீதத்தைக் கொண்ட ஏழு முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடப் போதுமான தகவல்கள் கிடைக்காததால், அவை ‘தகவல் வெளியிடப்படவில்லை’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தலா 500 மில்லியன் ரூபா அல்லது அதற்கு மேல் ஒதுக்கப்பட்ட 36 பாதீட்டு முன்மொழிவுகள் இந்த மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை 212 பில்லியன் ரூபாவாகும்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை