இந்தியாவில் தொங்கு நாடாளுமன்றம் !எந்தவொரு கட்சிக்கும் தனித்து பெரும்பான்மை கிடைக்காத நிலை

user 04-Jun-2024 இந்தியா 7 Views

இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு முடிவுகளின்படி பாரதிய ஜனதாக்கட்சி தனித்து 235 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி தனித்து 94 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

அந்த வகையில் 18ஆவது மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும், தனிப்பெரும்பான்மைக்கான 272 இடங்களைப் பெறவில்லை. இந்தநிலையில் பாரதிய ஜனதாக்கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின்படி பாரதிய ஜனதாக் கூட்டணி கட்சிகள்(என்டிஏ) இந்த தேர்தலில் இதுவரை 294 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

எனினும் அந்தக் கூட்டணி 400,தொகுதிகளில் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தது. இந்தநிலையில் இந்த ஆட்சியில் பங்கேற்கும் கூட்டணி கட்சிகள், எந்தநேரத்திலும் பாரதிய ஜனதாக்கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்படுமாக இருந்தால், அந்த நேரத்தில் நரேந்திர மோடியின் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்படலாம்.

அதேபோன்று காங்கிரஸின் தனித்து 100 தொகுதிகளைக் கூட வெற்றிகொள்ளாத நிலையில், ஆட்சியமைத்தால், கூட்டணி கட்சிகளின் விருப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டியேற்படும்.

முன்னதாக காங்கிரஸ் கூட்டணியும், தேர்தலில் 295 தொகுதிகளில் வெற்றி பெறமுடியும் என்று காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா முழுவதும் 543 தொகுதிகளில் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம்திகதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதன்போது அளிக்கப்பட்ட வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை