கிவுல் ஓயா திட்டம்: சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து நெடுங்கேணியில் கலந்துரையாடல்

user 03-Sep-2026 பொருளாதாரம் 62 Views

மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான தெளிவூட்டல் மற்றும் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் நடைபெற்றது.

கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி நெடுங்கேணி பிரதேசசபை கேட்போர் கூடத்தில், “இயற்கையை பாதுகாப்பது எமது உரிமை” என்ற தொனிப்பொருளில் நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் இயற்கை வளங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், வனஜீவராசிகள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வவுனியா வடக்கு பிரதேச மக்கள் எதிர்கொள்ளக்கூடிய சமூக மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டுக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். விஜயமோகன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செல்வராசா சுசீலன், சரவணமுத்து கருணாநிதி மற்றும் கணேஸ் சரோஜாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளைத் தலைவர் வைரமுத்து பூபாலசிங்கம், செயலாளர் சண்முகராசா தவேந்திரராசா, நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை