Tuesday, November 10, 2026
சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியை ‘சிறுவர் தின தேசிய வாரம் – 2026’ ஆக பிரகடனப்படுத்தி விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 1ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போதைய சூழலில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பாரம்பரிய சிறுவர் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கடந்து, இணையவழி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு அபாயங்களுக்கும் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறுவர்களுக்கு மாத்திரமன்றி, பெற்றோர், ஆசிரியர்கள், அரச அலுவலர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சிறுவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகியுள்ளது.
சிறுவர் உரிமைகள் தொடர்பில் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல், சிறுவர்கள் தொடர்பான சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தல் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் சமூகத்தின் பங்களிப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இத்தேசிய வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, செப்டெம்பர் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பல்வேறு விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.