Sunday, September 15, 2024
இலங்கை (Sri Lanka) கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் மூவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது நேற்று (26.04.2024) மேல் நீதிமன்ற நீதிபதி டி.எவ்.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கடற்பரப்பிற்குள் பெப்ரவரி மாதம் 12ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்களின் படகோட்டிகள் என்ற அடிப்படையில் மூவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றினால் 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கடற்றொழிலாளர்கள் சட்டத்தரணியின் ஊடாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தி விடுவிக்குமாறு நீதிபதியினால் உத்தரவிடப்பட்டுள்ளது..