ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிக்க வேண்டும்!

user 07-Sep-2024 இலங்கை 8 Views

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் இதற்காக ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று  இடம்பெற்ற  உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் டபிள்யூ.ஜே.பெர்னாண்டோ தலைமையில் சுதேச மருத்துவம் தொடர்பான முதலாவது குழு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவ்வாறான அறிக்கைகள் எவையும் வரவில்லை. உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும், ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர்.

கடந்த காலங்களில், சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. அதற்கான மதிப்பும் கிடைத்தது. இப்போது இந்தியா உள்நாட்டு மருத்துவம் குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.

இலங்கையில் அது நடக்கவில்லை. எனவே உள்நாட்டு மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளும், அதன் வரலாறுகள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த துறையை மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்வோம். இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும். இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும்.

இந்தத் துறைகள் அனைத்தையும் அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சட்டமொன்றை கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.

ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை நிறுவுவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம்.

ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை