வாக்காளர்களுக்கு நன்றி !

user 05-Sep-2024 இலங்கை 26 Views

அரச ஊழியர்களின் தபால்மூலமான வாக்குகள் அனைத்தும் தனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் எனவே வாக்களித்துள்ள அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாப்பஹுவவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  தபால் வாக்குகள் எனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்தது. எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. இன்று தேர்தலில் போட்டியிட வந்திருக்கும் 38 வேட்பாளர்களும் நாடு நெருக்கடியிலிருந்த போது நாட்டை மீட்க வரவில்லை.

விவசாயிகளே நாட்டை மீட்பதற்கு பாடுபட்டனர். எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் உதவியுடன் இன்று மீண்டு வருகிறோம். எனது தேர்தல் விஞ்ஞாபனம் பிரதான ஐந்து விடயங்களை இலக்காக கொண்டதாக அமைந்திருக்கிறது.

எதிர்கட்சிகள் இன்று வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் தருவதாக கூறுகின்றனர்.
கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சி சரிவு கண்டமைக்கு காரணமே இந்த வரி குறைக்கப்பட்டமை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியிடமும் ஜேவிபியிடமும் எந்த திட்டமும் இல்லை என்பதை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபங்களே உறுதிப்படுத்துகின்றன. அவர்களிடம் புதிய திட்டங்கள் இல்லை.
அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல திட்டங்களையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

சஜித் பிரேமதாச தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் இல்லை. அவரால் அனுகுரமார திசாநாயக்கவை தோற்கடிக்க முடியாது. சஜித் பிரேமதாசவே அனுரகுமார திசாநாயக்கவைப் பலப்படுத்தினார். இதுவரையில் இலங்கையில் ஆட்சி செய்தவர்கள் ஆளும் தரப்பை மிஞ்சி செல்ல இரண்டாம் தரப்புக்கு இடமளிக்கவில்லை. அதேபோல் எதிர்கட்சிகளும் தம்மை மிஞ்சி செல்ல மற்றுமொரு தரப்புக்கு இடம் கொடுக்கவில்லை.

நான் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் ஜே.விபிக்கு இடமளிக்கவில்லை. அதனால் அனுரகுமார திசாநாயக்க மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக செயற்பட்டார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாம் ஜேவிபியை கட்டி வைத்திருந்தோம்.
சஜித் பிரேமதாசவால் அதனை செய்ய முடியாமல் போனது. நாடாளுமன்றத்தில் சென்று வீண் பேச்சு பேசுவார். நாளாந்தம் ஒரு மணித்தியாலம் பேசிக்கொண்டிருப்பார்.

அதனால் நுற்றுக்கு 2 சதவீத ஆதரவு இருந்த அனுரகுமார எழுந்து வந்திருக்கிறார். அதனால் சஜித் இன்று அனுரவோடு போராட வேண்டிய நிலை வந்துள்ளது. சஜித் வெல்லப்போவதில்லை.

சஜித்துக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் அனுரவை பலப்படுத்தும். அதனால் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சியினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை