பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் !

user 06-Aug-2024 இலங்கை 14 Views

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான தமது மனுவை, பெருந்தோட்ட நிறுவனங்கள் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பான வழக்கு இன்று(6) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது தீர்மானத்தை அறிவித்தன. இதற்கமைய குறித்த வழக்கினை நிறைவுறுத்துவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக, சம்பள நிர்ணய சபையினூடாக அதிகரித்து, தொழில் அமைச்சினால் இரண்டு வர்த்தமானிகள் வெளியாக்கப்பட்டன.

எனினும் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களையும் செல்லுபடியற்றதாக அறிவித்து, கடந்த மாதம் புதிய வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.

இந்தநிலையிலேயே பெருந்தோட்ட நிறுவனங்கள், சம்பள அதிகரிப்புக்கு எதிரான மனுவை விலக்கிக் கொள்வதாக நீதிமன்றில் அறிவித்தன.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளம் தொடர்பாக புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனை அண்மையில் உறுதிப்படுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்(CWC) தேசிய அமைப்பாளர் பி.சக்திவேல், புதிய இணக்கப்பாட்டின் படி தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1500 ரூபாய் வேதனம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை