தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு

user 01-May-2024 இலங்கை 11 Views

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாயாக உயர்த்தப்பட்டமைக்கு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற்ற இ.தொ.காவின் பிரமாண்ட மே தினக் கூட்டத்திலேயே செந்தில் தொண்டமான், இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும், செய்வதைதான் சொல்லும்.

கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க ஒத்துழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு பல தொழிற்சங்கங்களும் பல சமூக அமைப்புகளும் உதவி செய்தன. இத்தருணத்தில் அவர்களுக்கு இ.தொ.கா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தருணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்ததை நினைவுக்கூறும் வகையில் முத்திரையொன்றை இ.தொ.கா முன்னிலையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் வெளியிட்டமைக்காக இந்த விசேட நன்றியை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருந்த தருணத்தில் 40 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசியையும் 100 மெட்ரிக்தொன் மருந்துகளையும், 500 மெட்ரிக்தொன் பால்மாவையும் வழங்கி மக்களுக்கு உதவியளித்திருந்தார். எவர் உதவி செய்தாலும் அவருக்கு நன்றியை கூறுவது இ.தொ.காவின் மான்பு. “போற்றுவார் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும்“ என்ற அடிப்படையில் எத்தருணத்திலும் எமது இலக்கில் இருந்து விடுபட மாட்டோம். இ.தொ.காவின் தலைவர் என்ற அடிப்படையில் கட்சியையும் மக்களாகியு உங்களையும் காப்பாற்றும் பணியில் ஒரு அடியேனும் பின்வைக்க மாட்டேன்” இவ்வாறு  செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை