மக்களவைத் தேர்தல் : கூட்டணியின் தயவில் ஆட்சியமைக்கும் மோடி!

user 05-Jun-2024 இலங்கை 4 Views

மக்களவைத் தேர்தலில் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோா்த்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது.

 

எனினும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை பா.ஜ.க பெற்றிருக்கின்றது.

இதேவேளை எதிர்க்கட்சிகளின் ”இந்தியா கூட்டணி” கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று, முன்னேற்றப் பாதையில் பயணித்திருக்கின்றது.

இந்தியாவிலேயே அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளார்.

ஆனால், கடந்த முறை 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்து பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றார்.

மறுபக்கம், அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தோற்கடித்த பா.ஜ.க வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னௌவில் ராஜ்நாத் சிங் மற்றும் கன்னௌஜில் அகிலேஷ் யாதவின் வெற்றி உறுதியாகியுள்ளதுடன், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கின்றார்.

 

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, இம்முறை 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும், குஜராத்தில் மொத்தமுள்ள 26-இல் 25 தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளதுடன், பிகாரில் பாஜக 12 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றது.

மேலும், ராஜஸ்தானில் கடந்த முறை 25 இடங்களிலும் வெற்றி பெற்ற பா.ஜ.க, இந்த முறை 14 இடங்களிலும், ஹரியாணாவில் கடந்த முறை மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க 9 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான சிவசேனை 7 இடங்களை கைப்பற்றியுள்ளதுடன், காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) 9 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களிலும் வெற்றி உறுதி செய்துள்ளதால் பா.ஜ.கவுக்கு அங்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது.

 

எனினும், ஒடிஸாவில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20-ல் பா.ஜ.க சிறப்பான வெற்றி பெற்றுள்ளதுடன், காங்கிரஸ் ஒரு தொகுதியை மாத்திரம் கைப்பற்றியுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த முறை 25 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க இம்முறை 17 தொகுதிகளிலும், கடந்த முறை ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற ஆளும் காங்கிரஸ், இம்முறை 9 இடங்களிலும் வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

கேரளத்தில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றிபெற்றுள்ளதுடன், காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளிலும், ஆளும் மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் திகதி தொடங்கி ஜூன் 1-ஆம் திகதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணும் பணிகள் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

 

முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

தொடக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், பின்னர், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருந்தது.

மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில், பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 292 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றது.

எனினும், கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களிலும், அதன் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் இணைந்து 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 300 இடங்களைக்கூட பெற முடியவில்லை.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை