கிளப் வசந்த விவகாரம்: பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் வேறு சிறைச்சாலைக்கு மாற்றம்

user 15-Jul-2024 இலங்கை 6 Views

அத்துருகிரியவில் கிளப் வசந்தவை சுட்டுக்கொல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து பிரித்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பச்சை குத்தும் நிலைய  உரிமையாளர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவரை வேறு சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பச்சை குத்தும் நிலைய உரிமையாளருடன் 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளரைத் தவிர ஏனைய ஆறு சந்தேகநபர்களும் கொழும்பு தடுப்புச் சிறைச்சாலையின் இரண்டு அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (08) அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இச்சம்பவத்தை வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டுள்ளமை தெரிய வந்துள்ளதோடு, கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரும் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இவ்வாறான பின்னணியில் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

 

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அவர்களின் உறவினர்கள் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை