Tuesday, November 10, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த போதிலும், அவர்களின் உரிமைப் போராட்டம் பல்வேறு தரப்பினரால் கையாளப்பட்டு, நியாயமான கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை எந்தவிதமான தீர்வும் வழங்கப்படாமல் அவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (04) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ‘திபுலபொத்தானை’ என்ற பெயரில் கிராமம் எதுவும் இல்லை எனவும், எனினும் தற்போது பெரியமாதவனைப் பகுதி ‘திபுலபொத்தானை’ என அழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு – மாதவனை பகுதிகள் தற்போது சேனைப் பயிர்ச்செய்கைக்காக ஆக்கிரமிக்கப்படுவதாகவும், அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, அவற்றை மேய்ச்சலுக்கு விடாமல் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ‘நல்லிணக்கம்’ என்ற பெயரில் இரு தரப்பினரையும் ஒரே மேய்ச்சல் நிலத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது, பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து படிப்படியாகவும் முழுமையாகவும் வெளியேற்றும் திட்டமாக அமையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலைமை தொடருமானால், எதிர்காலத்தில் கால்நடை வளம் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பண்ணையாளர்களின் பிரச்சினைகளைப் பயன்படுத்தி சுயநல நோக்கங்களுக்காக செயற்பட்ட சில தரப்பினரின் நடவடிக்கைகளும் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் கால்நடை வளத்தையும் பாதுகாக்கும் வகையில், நிரந்தரமானதும் நியாயமானதுமான தீர்வை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.