சூடுபிடிக்கும் இந்திய அரசியல்!

user 29-Mar-2024 இந்தியா 4 Views

இந்திய நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசருக்கு சுமார் 600 சட்டத்தரணிகள் திடீரென கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது மத்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும் இந்தக்கடிதத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேநேரம் பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்களும் பதிலை வழங்கியுள்ளனர்.

இந்திய சட்டத்தரணிகள் சபையின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மூத்த சட்டத்தரணி; ஹரிஸ் சால்வே உட்பட 600 சட்டத்தரணிகளால் இந்தக் கடிதம், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் டி.வை.சந்திரசூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தங்கள், நெருக்கடிகளில் இருந்து இந்திய நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தேசம் இப்போது தேர்தல் களத்தை எதிர்கொண்டிருக்கிறது. இத்தகைய தருணத்தில் சுயநலவாத கும்பல் ஒன்று இந்திய நீதித்துறைக்கு அழுத்தம் தருவதற்கும் இந்திய நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நெருக்கடிகள், நீதிமன்றங்களை மிகவும் கடுமையாகப் பாதிப்பதுடன், நீதித்துறையின் கண்ணியத்தின் மீதான கடும் தாக்குதலாகும் என்றும் சட்டத்தரணிகளின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த கடிதத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

அதில், பிறரை துன்புறுத்துவதுதான் காங்கிரஸின் கலாசாரம்; 140 கோடி மக்களும் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமும் இல்லை என கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஸ்; உள்ளிட்டோர் பதில் விமர்சனத்தையும் கொடுத்துள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழலில் தேசிய அரசியலில் 600 சட்டத்தரணிகளின்; கடிதம்,எந்த வழக்கையும் குறிப்பிடாமலேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த கடிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை