ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சந்தேகநபர் கொழும்பில் கைது!

user 24-May-2024 இலங்கை 7 Views

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை குறித்த குழுவிலுள்ள புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். இந்த நிலையில் குறித்த நான்கு நபர்களுடன் நாட்டினுள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் தொடர்பாக ஏற்கனவே தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரே சம்பந்தப்பட்ட நால்வருக்கும் விமானச் சீட்டு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி இரவு இண்டிகோ விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னை நோக்கி குறித்த நால்வரும் இலங்கையில் இருந்து புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதனால், இலங்கையை சேர்ந்த வேறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வேறு விமானங்களின் ஊடாக இந்தியாவிற்கு சென்றுள்ளனரா என்பது தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நால்வரும் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான மொஹமட் நுப்ரான், நாட்டில் பாரிய போதைப்பொருள் கடத்தல் காரரான பொட்ட நௌபரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை